Thursday, December 31, 2009

ஹாப்பி நியூ இயர் 2010

2010
இன்னும் சில மணி நேரங்களில் கடந்து செல்லவிருக்கும் 2009-ம் ஆண்டு, எனக்கு அதிக மகிழ்ச்சிகளையும், நல்ல புதிய நண்பர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.. நெருக்கடியான உலக பொருளாதார சரிவின்போதும் எனக்கு ஊதிய உயர்வு (எதிர்பார்த்தது இல்லன்னாலும் கொடுத்தாங்க பாருங்க), பணியில் நிறைய புதுவிஷயங்கள் கத்துக்கற வாய்ப்பு, ஒருவழியா நானும் பதிவெழுதத் துவங்கியது, பல புதிய பதிவுகள்/பதிவர்கள் அறிமுகம் மற்றும் நட்பு, அப்படின்னு ரொம்ப நல்லாவே போச்சுங்க இந்த வருஷம்..

என்னது..? வருத்தப்படற மாதிரி ஒண்ணுமே நடக்கலையா'வா? நீங்க வேற... அதுவும் கொஞ்சம் இருந்தது.. ஆனால், புது வருஷத்தை வரவேற்கத் தயாராகும் இந்த இனிமையான நேரத்தில் அதெல்லாம் எதுக்கு?? சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்லும் "நல்லதை மட்டும் எடுத்துக்கங்க.. கெட்டதை அப்படியே விட்டுடுங்க" பாலிசி தான்...

எல்லா வருடமும், இன்னும் தொடர்பிலிருக்கும் என் பள்ளி நண்பர்களுடனும், ஏரியா நண்பர்களுடனும் தான் பீச், பார்ட்டி என்று புதுவருடத்தைக் கொண்டாடுவேன்.. ஆனால், இந்த வருடம், வீடு மாறிவிட்டதாலும், நண்பர்கள் அனைவரும், வேலைநிமித்தமாய் வெளியூரில் இருப்பதாலும், ஆர்பாட்டம் ஏதுமில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறேன்.. புதுவருடப் பிறப்பை நோக்கி... Really Missing You Guys!!!

பிறக்கப் போகும் 2010-ம் ஆண்டும் இறைவனின் அருளால் பல மகிழ்ச்சியான விஷயங்களை அள்ளித்தரும் என்று நம்புகிறேன்.. பார்ப்போம்..

ஓகே.. உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. ஸ்டார்ட் மியூசீக்க்க்க்க்க்....

Sunday, December 27, 2009

நிகழ்(ச்)சுவை 27-12-2009

பொது

2009-ம் வருடத்தின் கடைசி ஞாயிறான இன்று டிவியில் கொஞ்சம் கிரிக்கெட், ஜாக்கி சானின் நியூ போலீஸ் ஸ்டோரி திரைப்படம், சூடான லஞ்ச், சுகமான மதிய தூக்கம் என்று இனிதாகவே கழிந்தது.. நேற்று டிசம்பர் 26 சில வருடங்களுக்கு முன்பு, மெரினாவில் சுனாமியிடம் தப்பித்து ஓடியது நினைவுக்கு வந்தது.. அந்த பாதிப்பை கவிதையாக்க முயன்றிருந்தேன்.. அது இங்கே..

தெலுங்கானா பிரிப்பது பற்றிய முடிவுக்கு வர மத்திய அரசுக்கு நாளைக்கு கெடுவாம்.. அந்த விஷயம் பற்றிய முழு வரலாறு தெரியாது.. எனினும் எந்த சேனலை மாற்றினாலும் தொடரும் வன்முறை, பற்றி எரிகிறது ஆந்திரா என்று ஒரே திகிலாகவே இருக்கிறது.. பிரித்துக் கொடுத்துவிட்டால் இது இந்தியா முழுக்க தொடர்கதையாகும் அபாயம் இருக்கிறது.. எது நடந்தாலும் பாதிக்கப்படப் போவதென்னவோ அப்பாவி மக்கள் தான்.. ஆர்பாட்டத்தாலும் வன்முறையாலும் இதுவரை நாசமான பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.250 கோடியாம்.. இந்த அழகில், ஆந்திர ஆளுநர் பெண்களுடன் உல்லாசமாய் இருந்து மாட்டிக் கொண்டு இப்போது ராஜினாமா செய்திருக்கிறார்..

சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட், விசா எதுவுமின்றி "வித் அவுட்டில்" வந்த ஒருவரை பாதுகாப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.. சவுதி விமான நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியான இவர், எப்படியோ சக ஊழியர்களை சரிகட்டி விமானத்தின் டாய்லட்டில் ஒளிந்துகொண்டு பயணம் செய்திருக்கிறார்.. ஒரு படத்தில் பார்த்திபன் வடிவேலுவிடம், "நாங்கல்லாம் பிளைட்லேயே டிக்கட் எடுத்தது கிடையாது" என்று சொல்வாரே.. அது தான் நினைவுக்கு வந்தது..


சினிமா

ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் காணக் கிடைத்தது.. கண்டிப்பாக வித்தியாசமான முயற்சிதான் என்பதும், கொடுத்த டிக்கட் காசுக்கு பங்கம் வராது என்பதும் சில கிளிப்பிங்களிலேயே தெரிகிறது.. ட்ரைலர் வெளியீட்டு விழாவின் போது கமலே சற்று அசந்து தான் போய்விட்டார்.. அந்த படபடப்பு அவரின் பேச்சிலேயே தெரிந்தது..
அதை யு-டியுப்'பில் தேடிப் பிடித்துப் பாருங்கள்..

இன்னும் அவதார் பார்க்கவில்லை.. சத்யமில் டிக்கட் கிடைக்காததால்.. இந்தப் படத்தை 3D யில் மட்டுமே பார்க்கணும் என்று நண்பர்கள் பலரும் சொல்லியிருக்காங்க.. அதான்..

அதுக்கப்புறம் பொங்கலுக்குத்தான் நெறைய படங்கள் வெளியாகிறது போல.. அதுவரை சன் டிவி சேனல்களில் விஜய்யும், மற்ற சேனல்களில் நகுலும், கால்மணிக்கொரு முறை வெற்றிநடை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்..


விளையாட்டு


இநதிய-இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று.. துவக்கம் முதலே இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மேட்ச், திடீரென்று ஆடுகளம் அபாயகரமாக இருக்கிறது என்ற காரணத்தால் பாதியிலேயே கைவிடப் பட்டது.. என்னக் கொடுமை சார் இது? வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியாவில் எல்லாம் முக்கால்வாசி பவுன்சி ட்ராக் தானே? அங்கேயும் நாலு அடிவாங்கிட்டு பிட்ச் சரியில்லை, அபாயகரமா இருக்குன்னு சொல்லிட முடியுமா?? ஆடத் தெரியாதவ கூடம் கோணல்'ன்னு சொன்ன கதையால்ல இருக்கு..


கவிதை

பொட்டல் வெளியில்
ஒற்றைப் பனைமரம் போல்
தனியே நிற்கிறேன் நான்...

என்னை விழுந்து விடாமல்
பற்றிக் கொள்கிறது - உன்
நினைவுகள் என்னும் வேர்கள்...**********
இப்போதைக்கு அவ்வளவு தாங்க.. பிடிச்சிருந்தா மறக்காம உங்கள் கருத்தையும், ஓட்டுகளையும் தந்துட்டுப் போங்க..

Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் – எனது பார்வையில்

vettaikaran
நேற்று இரவு முதலே பல பதிவுகளில் (நெகடிவ்வாக) விமர்சனங்கள் வரத்தொடங்கினாலும், விஜய், அனுஷ்கா, சன் டிவி, ஏவிஎம், நண்பர் நடிகர் சத்யன், துள்ள வைக்கும் பாடல்களால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் இன்னபிற காரணங்களால் டிக்கெட் முன்பதிவு செய்து இன்று அம்பத்தூர் ராக்கியில் பகல் காட்சி போயிருந்தேன்.. உண்மையிலேயே விஜய் செம மாஸ்'ப்பா..

அதே வழக்கமான, ஏதோ ஒரு லட்சியத்துடன் வரும் ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால் வில்லனை எதிர்த்து போராடி, நடுநடுவே, ஹீரோயினுடன் காதல், காமெடி என்று கலந்து கட்டி, இறுதியில் வெற்றிபெறும் தமிழ் சினிமாவுக்கே உரித்தான அரதப் பழசான கதை. ஆனால்.. லாஜிக் சற்றுமில்லாத திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் பிசிறடிக்கிறது படம்.. முதல்பாதி ஓரளவுக்கு கலகலப்பாய் நகர்ந்தாலும் ஏற்கெனவே பல திரைப்படங்களில் பார்த்துவிட்டதைப் போன்றதையொத்த காட்சிகள் என்பதால் சலிப்பே மிஞ்சுகிறது..

விஜய்யை பொறுத்தவரை, தன் பங்களிப்பை சரியாய் செய்திருக்கிறார்.. காமெடி மற்றும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்'களில் கவனம் செலுத்தும் இவர், கதையைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.. நீர் வீழ்ச்சியிலிருந்து குதிப்பது, காரோடு பறப்பது, அடிக்கும் போது எதிரிகள் பலமைல் தள்ளிப் போய் விழுவது போன்ற காட்சிகளுக்கெல்லாம் ஏன் சார் ஒத்துக்கறீங்க?? (படத்தின் ஆரம்பத்தில் கும்மாளமாய் ஆட்டம் போட்ட விஜய்யின் தீவிர ரசிகர்களே கூட இதுபோன்ற காட்சிகளால் நொந்துபோய் கமெண்ட்ஸ் அடித்ததைக் காண முடிந்தது..)

அனுஷ்கா சில/பல காட்சிகளில் விஜய்யை விட பெரியவராக/உயரமாகத் தெரிகிறார். அருந்ததி அளவுக்கு இத்திரைப்படத்தில் நம்மை ஈர்க்கவில்லை என்பதே உண்மை..

சத்யன், ஸ்ரீநாத், ஷாயாஜி போன்றோர் சிரிக்கவைக்க முயல்கின்றனர்.. ரொம்ப படங்களுக்குப் பின் நண்பர் சத்யனுக்கு நிறைய காட்சிகளில் வரும் வாய்ப்பு..

சாய்குமார், சலீம் கௌஸ், இன்னொரு தெலுங்கு பட வில்லன்.. இவர்களின் பாத்திரப் படைப்பு கர்மம்'டா சாமி.. அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியாய் வருபவர் மட்டும் (அவரும் தெலுங்காம்) கொஞ்சம் ஓகே.. சுகுமாரி, டெல்லி கணேஷ், கொச்சின் ஹனீபா ஆகியோரும் இருக்கிறார்கள்..

மற்றபடி, எடிட்டிங், இசை, நடனம், கலையலங்காரம், ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்களும் அந்தளவுக்கு கதைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது வருத்தப்பட வைக்கும் அடுத்த விஷயம்..

மொத்தத்தில் ஒரு திரைப்படத்தை ஹிட்'ஆக மாற்றக்கூடிய சில அம்சங்கள் இதில் மிஸ்ஸிங் என்றாலும் சன் டிவி என்ற பிரம்மாண்டம் துணையிருக்கிறது.. பார்ப்போம்..

எனக்கும் விஜய் பிடிக்கும் என்பதால் கொஞ்சம் வருத்தத்துடன்... Better Luck Next Time Vijay...

Saturday, December 12, 2009

என்றென்றும் சூப்பர் ஸ்டார்

1992-ம் ஆண்டின் துவக்கமென்று நினைக்கிறேன்.

சென்னை (மைலாப்பூர்) லஸ் கார்னரில் இருந்த காமதேனு
தியேட்டரில் குடும்பத்துடன் தளபதி மாலைக்காட்சி.

காதைப் பிளக்கும் விசில் சப்தங்கள்.. இடைவெளியற்ற கரகோஷங்கள்.. எங்கும் பறக்கும் காகிதத் துகள்கள்.. பல்வேறு விதமாய் உற்சாகக் கூச்சல்கள்.. இதன் நடுவே தான் முதன் முறையாய் பெரிய திரையில் எனக்கு அறிமுகம் ஆனார் ரஜினி.

நாங்கள் உள்ளே சென்றபோது "ராக்கம்மா கையத் தட்டு" பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து திரையரங்கமே ஆடிக் கொண்டிருந்தது. துள்ளாட்டம் போடும் ரசிகர்களின் தலைகளுக்கு மத்தியில் அவரின் முகத்தை சரியாகப் பார்க்கவே வெகு நேரம் பிடித்தது எனக்கு. ஒருவழியாய் பார்த்தும் விட்டேன். வாவ்.. அது தான் நான் அவரின் ரசிகனாய் மாறிப் போன மாய நொடிகள். அன்று முதல் இன்று இந்த நொடி வரை அவரின் ரசிகனாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!!!

என்னைக் கவர்ந்த அவரின் திரைப்படங்கள், அரசியல் நிலைப்பாடுகள், ஆன்மீக தேடல்கள், மனிதநேய செயல்கள் இதையெல்லாம் பட்டியலிட்டால் இந்த ஒரு பதிவு தாங்காது...

எனவே.. என்னைப் போன்ற கோடானுகோடி ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு என் இதயப் பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

நீங்களும் உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக அவரை வாழ்த்திச் செல்லுங்கள்..

இது நமக்கு... :)
Tuesday, December 8, 2009

என்னுள்ளே... என்னுள்ளே...

alone


ங்கிங்கெனாதபடி எங்கும்
இருக்கிறாய் நீ...

என்னைச் சுற்றியுள்ள
எல்லாவற்றிலும்...

என்னைக்
குத்திக் கிழித்து
கடந்து செல்லும்
ஒவ்வொரு
நொடித் துகளிலும்
வரம்புகளின்றி பிணைந்து
கிடக்கிறாய் நீ...
உன் நினைவுகளால்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறேன்
நான்...

பல முறை யோசித்தும்
ஒருபோதும் கண்டுபிடிக்க
முடிந்ததில்லை என்னால்..
"இத்தனை ஆழமாய் நீ
என்னுள் நுழைந்த சூட்சுமத்தை..."

Friday, December 4, 2009

நிகழ்(ச்)சுவை 04-12-2009

என் கவனத்துக்கு வரும் சக நிகழ்வுகளை உங்களுக்கு சுவைபடத் தருவதின் நோக்கமே இந்த நிகழ்(ச்)சுவை. மற்றபடி இதுவும் என்'ணங்கள், அவியல், கொத்துபரோட்டா, சாண்ட்விட்ச், காக்டெயில்.... வகையறாவே.. படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்...


*****************
பதிவுலகம்
வேறெதைப்பற்றி சொல்ல முடியும்..?? சக பதிவர் நர்சிம்'மின் படைப்புகளின் முதல் தொகுப்பாக "அய்யனார் கம்மா" என்ற புத்தகம் வெளிவரவிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதுகுறித்த பதிவுகளின் சுட்டி இங்கே. நேரில் சென்று வாழ்த்தி அவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம் என்றிருக்கிறேன்.
அது ஒருபுறமிருந்தாலும் Congrats Narsim...!


********************
விளையாட்டு
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திய-இலங்கை டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் அட்டகாசமான அதிரடியை வெளிப்படுத்தியிருக்கிறார் வழக்கம் போல. வெற்றிகரமாய் 300'ஐத் தாண்டி லாராவின் சாதனையை தகர்ப்பார் என்று நம்பியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக 293'ல் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா... இலங்கை அணியினர் தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். ஒரே நாளில், 40x4, 7x6 உடன் 284 ரன்கள். Unbelievable!!!... மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அடைந்திருக்கும் குதூகலத்தை உணர முடிகிறது. மற்றொரு விஷயம், தமிழக வீரர் முரளி விஜயின் நேர்த்தியான துவக்க ஆட்டம். Well Done Vijay!!!... மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் ஆகியோரின் அரைசதங்களால் இப்போதைக்கு இந்த மேட்ச் இந்தியாவின் வசம் இருக்கிறது.. பார்ப்போம்..


*********************
சினிமா
இன்னைக்கு ஆதவனின் ஐம்பதாவது நாள் போஸ்டரைப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன். ஏம்பா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா???

தற்போதைக்கு பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியிருக்கும் படம் ரேனிகுண்டா. கேபிளாரின் விமர்சனத்திற்காக வெயிட்டிங்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் படைப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இசைவெளியீடு லண்டனில் நடைபெறவிருக்கிறதாம். நமக்குப் பிரச்சனையில்லை.. அடுத்த நாள் வலைத்தளங்களில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.


*************
பொது

வேதாரண்யம் பள்ளிக்குழந்தைகளின் வேன் விபத்து சோகத்துக்குள்ளாக்கியது. வேன் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் பழக்கமுடையவராம். இவனுங்கள என்னத்த சொல்றது???

"குடி"மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. டாஸ்மாக்'கிலேயே திருட்டுத் தனமாக சரக்கில் தண்ணீர் கலந்து விற்கிறார்களாம். அதான் நம்ம ஆளுங்க எவ்ளோ அடிச்சாலும் கிக்கே இல்லையேன்னு புலம்புறாங்களோ???

இருக்கிற செல்போன் சேவை பத்தாதுன்னு "யுனினோர்" என்று ஒருத்தன் வந்திருக்கான். எல்லா சிக்னல் கம்பங்களிலும் இவன் விளம்பர போர்டை வைத்திருக்கிறான். பார்க்கலாம்.. மக்களை மடையர்களாக்க இவன் என்ன பிளான் வைத்திருக்கிறான் என்று..


*****************
கவிதை (இது என்னுடையது தான்)

கவிதை கேட்கிறாய் நீ...

உன்னைப் பற்றி யோசிக்கவே
நேரம் போதவில்லை எனக்கு...
பின் எப்படி யோசிப்பேன்
கவிதைக்கான வார்த்தைகளை???

எதையாவது கிறுக்கி அனுப்புகிறேன்...
உன் பார்வை பட்டால் என்
கிறுக்கல்களுக்கும் கிடைத்துவிடும்
"கவிதை" எனும் பட்டம்!!!

Sunday, November 29, 2009

மொட்டை – சிறுகதை

waitingகாலை 8.20 மணி...

சென்னையின் மையப் பகுதியான ராதாகிருஷ்ணன் சாலை, பலதரப்பட்ட மக்களின் காலைநேர அவசரங்களுக்கு ஈடுகொடுக்கத் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது.. பள்ளி, கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விரைந்து கொண்டிருப்போரைப் பற்றி துளியும் கவலைப்படாமல், இன்னும் சற்றுநேரத்தில் வரவிருக்கும் பேருந்திற்காக, சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் தன் பைக்கில் பதற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறான் மொட்டை.

மொட்டை??? அதுவல்ல அவன் பெயர்.. ஆனால் அதுபற்றி உங்களுக்கென்ன?? அம்மு அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்... அம்மு... அவளைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது... ஏனெனில், யாரும் அவளைப்பற்றி பேசுவதை மொட்டை விரும்ப மாட்டான்.. எனவே, சுருக்கமாய் சொல்வதென்றால் அவள் ஒரு தேவதை... அவ்வளவுதான்..

ஆம் உங்கள் அனுமானம் சரி தான்.. அம்மு வரப்போகும் பேருந்திற்காகத் தான் மொட்டை காத்திருக்கிறான்... எதற்காகவா? சரி சரி.. பேருந்து வருவதற்குள் சட்டென விஷயத்தை சொல்லிவிடுகிறேன்..

அம்முவும் மொட்டையும் ஒரே நிறுவனத்தில் தான் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.. துவக்கத்தில் நட்பில் ஆரம்பித்த நெருக்கம் ஒரு கட்டத்தில் மொட்டையை காதல் என்ற கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.. எவ்வளவோ போராடி மறைக்க முயன்றும் முடியவில்லை.. எனவே, அம்முவிடம் தன் காதலை வெளிப்படுத்திவிட்டான். அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும்.. என்றாலும், யோசித்துச் சொல்வதாய் சொல்லியிருக்கிறாள். அம்மு சொல்லப் போகும் பதிலுக்காக அதிகாலையிலே எழுந்து, குளித்து, கோவிலுக்கெல்லாம் போய் வந்து, இப்போது இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே காத்துக்கொண்டிருக்கிறான் மொட்டை. ஆம்.. அவள் இங்கு தான் இறங்குவாள்..

அதோ.. தூரத்தில் வாகன நெரிசலுக்கிடையே பேருந்து தெரிய ஆரம்பித்துவிட்டது... வந்ததும் அம்மு என்ன சொல்லப் போகிறாளோ என்ற ஆவலுடன் எழுந்தவனை தோளில் தட்டியது ஒரு கை...

"என்னடா.. கிளம்பலாமா???".... ஏடிஎம்-மின்னின்றும் வெளிப்பட்ட மொட்டையின் நண்பன் ரகு கேட்டான்...

ஒருகணம் திகைத்து, பின், நினைவுகளிலிருந்து மீண்ட மொட்டையை கவனித்த ரகு...

"டேய்... இன்னும் அவளையே நினைச்சிட்டிருக்கியா??? அவ தான் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் ரெண்டு வருஷமாச்சே.. விட்டுத் தள்ளேண்டா" என்றபடி பைக்கை உயிர்ப்பித்தான்.

ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தபடி பைக்கின் பின்னாலமர்ந்த மொட்டையால், அம்மு ஏன் பதிலே சொல்லாமல் போய்விட்டாள் என்ற கேள்வியை மட்டும் விட்டுத் தள்ளவே முடியவில்லை..

Wednesday, November 11, 2009

This Is It: ஒரு அற்புத அனுபவம்!நான் ஒன்றும் மைக்கேல் ஜாக்சனின் ரசிகன் கிடையாது. அவரைத் திரையில் பார்த்ததும் மைக்க்க்க்கே......ல்ல்ல்ல் என்று அலறுபவனில்லை நான். அவரது பாடல்களின் (புரியப் போவதுமில்லை என்பது வேறு விஷயம்) அடிமை கிடையாது. ஆனால் அவரின் மறைவுக்குப் பின் வந்த, வந்துகொண்டிருக்கிற செய்திகளை அவ்வபோது கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு, சமீபத்தில் வெளியான This Is It திரைப்படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இன்று தான் அமைந்தது.

மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் தனது அடுத்த இசைச் சுற்றுப்பயணமான This Is It -க்கு அவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்வதையும், அதில் பங்குபெறும் மற்ற கலைஞர்களின் பேட்டிகளையும் மட்டுமே தொகுத்து வெளியாயிருக்கும் டாகுமெண்டரி படம் தான் This Is It.

சும்மா சொல்லக் கூடாது. அந்த மனிதரின் பெயரும் முகமும் திரையில் தெரியும்போது நம்மவர்களே போட்ட ஆனந்தக் கூச்சல் இருக்கிறதே.. எனக்கும் கொஞ்சம் சிலிர்த்துப் போய் விட்டது. ஐம்பது வயதென்று நம்ப முடியாத தோற்றமும் அவரின் நடன அசைவுகளும்... வாவ்... முக்கால் செகண்டுக்குள் அவரின் அங்கங்கள் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அனாயாசமாய் அசையும் அழகு இருக்கிறதே.. இப்போதுதான் தெரிகிறது... அவர் ஏன் உலகளாவிய ரசிகர்களை இந்தளவு கவர்ந்திருக்கிறார் என்று...

ஆனால் அவர் இறந்ததும், அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார், எலும்பும் தோலுமாய் இருந்தார், நடக்க முடியாமல் அவதிப்பட்டார் என்று எத்தனை செய்திகள். அத்தனையும் பொய்யென்று நிரூபிக்கிறது அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடன அசைவுகள். சக கலைஞர்களெல்லாம் 20-25 வயதுக்குட்பட்டவர்கள். ஆனால் அவர்கள் தான் அவருடன் ஈடுகொடுத்து ஆட முயன்று கொண்டிருந்தார்கள் என்றே கருதுகிறேன் நான்.

சத்தியமாய் அவரின் எந்த ஆல்பத்தையும் நான் இதற்குமுன் பார்த்திருக்காவிடினும், இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக அத்தனையும் ஒருசேரப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது. அவரின் ""Love Lives Forever"" என்ற வாசகத்துடன் நிறைவு பெறுகிறது படம்.

மைக்கேல் ஜாக்சனின் இந்த இசைக் காவியத்தைப் பார்க்க அடிப்படைத் தேவைகளாக நான் உணர்ந்தது இதைத்தான்...

அவரின் ரசிகனாக இருத்தல்??
குறைந்த பட்சம் அவரின் பாடல்களைப் பற்றிய முன்னறிவு??
மேற்கத்திய இசையின் மீது நாட்டம்???

ஒரு மண்ணும் இல்லை...!!!

இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் போதும்... மற்றதை மைக்கேல் ஜாக்சன் பார்த்துக் கொள்வார்.

Sunday, November 8, 2009

பாழாய்ப் போன "காதல்" கவிதைகள்


நான் காணும் அனைத்தும்
ஏதாவது ஒருவகையில்
உன்னை நினைவூட்டுகின்றன

உன்னை நினைவூட்டும் வகையில்
ஏதாவது இருக்காதா என்ற
தேடலுடன் மட்டுமே
அனைத்தையும் காண்கிறேன்
நான்!!!


**********************************

மருத்துவமனை சென்றிருந்தேன்...

என் ரத்தம் பரிசோதித்த பின்
மருத்துவன் சொன்னான்..
இது ஏதோ புது வகையைச்
சேர்ந்ததென்று..
மருத்துவ உலகின் அதிசயமாய்
இருக்கக் கூடுமென்று...

இன்னும் ஏதேதோ புலம்பினான்
பைத்தியக்காரன்..

பாவம்.. அவனுக்கெப்படித் தெரியும்???
என் ரத்த அணுக்கள்
எப்போதோ உன் பெயருக்கு
மாறிவிட்ட விஷயம்!!!

***************************************

எல்லா மொழிகளிலும்
தேடி விட்டேன்...

நீ உதடு சுழிப்பதற்கு
இணையான கவிதையை
வரைவதற்கு வார்த்தைகளே
இல்லை....

Friday, November 6, 2009

மெரீனாவில் நோ கிரிக்கெட்: என்ன கொடுமை சார் இது???

இப்ப தாங்க.. ஜெகன் போன் பண்ணினான். விஷயம் கேள்விப்பட்டதும் ரொம்ப வருத்தமா போச்சு.. விஷயம் இதுதான்...

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியவர்களை போலீஸார் விரட்டிவிட்டார்கள். நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறாக இவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததால் இந்த நடவடிக்கை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவோர் டென்னிஸ் பந்துகளையே பயன்படுத்துகிறோம். எனவே யாருக்கும் அடிபட்டு, காயம் ஏற்பட வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்தவரை நடைப்பயிற்சி செய்வோரே சற்று நேரம் நின்று இந்த கிரிக்கெட்டை ஆர்வமுடன் பார்த்துவிட்டுப் போவார்களே தவிர, இத்தனை ஆண்டுகளாக எந்த நடைப்பயிற்சி அமைப்புகளும் இதுபோன்று புகாரெல்லாம் தந்ததில்லை.

-----------------

சனி ஞாயிறுகளில், பட்டினம்பாக்கம் தொடங்கி அண்ணா நீச்சல் குளம் வரை, தங்களைத் தானே சச்சினாகவும், பிரெட் லீயாகவும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் கிரிக்கெட் விளையாடும் 2000-3000 பேர்களில் நானும் ஒருவன்.

சனிக்கிழமை இரவே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். நாளை எதிர்த்து ஆடப் போகும் அணியின் ஜாதகம் அலசப்படும். சென்றமுறை அவர்களிடம் கேவலமாய் தோற்றது நினைவில் நாட்டியமாடும். "மச்சான், இந்தமுறை(யாவது) ஜெயிச்சுடனும்டா" ஒருவருக்கொருவர் உறுதிமொழி எல்லாம் பின்னி பெடலெடுக்கும். தூங்கப் போனால், கனவில் கூட, போன மேட்ச் வாங்கிய உதை வந்து இம்சை பண்ணும்.

ஞாயிறு விடிந்ததும் அணியைத் திரட்டிக் கொண்டு (இது ஒரு பெரிய கலை)... பீச்சுக்கு போய் பிட்ச் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துடும். ஒரு வழியாய் எதிரணி வந்து டாஸ் போட்டு, முந்தைய நாளிரவில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றிருந்தாலும், நாங்கள் இந்த (சப்பை) அணியை வென்று எங்கள் மனக்காயத்துக்கு தற்காலிக மருந்து போட்டுக்கொள்வோம். ஒருவேளை தோற்றுவிட்டால்.. "விடு மச்சான். நேத்து இந்தியாவே தோத்துடுச்சு"னு மொக்கையாய் ஆறுதலும் சொல்லிக் கொள்வதுண்டு.

"அவன் தான் ஆப்-சைடு'ல அடிக்கறான்னு தெரியுதுல்ல, லெக்-சைடு'ல போடுடா..." "டேய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கறாண்டா" போன்ற, சென்னை-28 என்ற திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமான அனைத்து அம்சங்களின் பிறப்பிடமே இந்த மெரீனா தான்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என, வயது வித்தியாசமில்லாமல் எத்தனை அணிகள், எத்தனை நண்பர்கள், எத்தனை அனுபவங்கள்... இதைப்பற்றி எழுதவே தனி பதிவு தேவைப்படும்... So.. coming back to the issue...

ஏற்கனவே ஞாயிறு மதியங்களில் மெரீனாவில் பார்க்கிங் காரணமாய் கிரிக்கெட் விளையாட முடியாது. நாங்கள் விளையாடுவதே ஞாயிறு காலை முதல் மதியம் வரையிலான ஐந்து மணிநேரங்கள் தான். இதிலும் பல ஞாயிறுகளில், விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரக் கூட்டங்கள், மாரத்தான் ஓட்டங்கள், என்று எங்கள் கிரிக்கெட் ஆட்டங்கள் தடைபட்டுப் போவதுண்டு.

மேலும், சென்னையில் பெரும்பாலான பள்ளி மைதானங்களில் பொதுமக்கள் விளையாட அனுமதிக்கப் படுவதில்லை. மாநகராட்சி மைதானங்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மழை வேறு ஆரம்பித்துவிட்டதால் இருக்கும் ஒன்றிரண்டு மைதானங்களும் சகதியாய் நிரம்பி ஈஈஈஈ'யென்று இளித்துக் கொண்டிருக்கும்.

எனவே, மெரீனாவில் இனி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற காவல்துறையின் இந்த அறிவிப்பு, அங்கு கிரிக்கெட் விளையாடிய, விளையாடுகிற, விளையாடப் போகிற எவருக்குமே அதிர்ச்சியாய்த் தான் இருக்கும்..

---

ஒரு நிமிஷம் இருங்க.. போன்..

"மணி.. சீனா பேசறேன்டா"
"சொல்லு சீனா"
"இந்த வாரத்திலிருந்து பீச்'ல விளையாடக் கூடாதாமேடா... அப்போ எங்க போய் விளையாடறது??"
"ஒன் செகண்ட் மச்சி.."

---

சரிங்க... இப்போ நாங்க லோக்கலில் இருக்குற மைதானங்களோட கண்டிஷன்ஸ் பத்தியெல்லாம் டிஸ்கஸ் பண்ணனும்... வரட்டுமா..?!?

Wednesday, November 4, 2009

10/10 — பிடித்ததும், பிடிக்காததும்

என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நண்பர் நர்சிம்மிற்கு நன்றிகள்.

***************************

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

*****
இதோ எனது பதில்கள்:

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ராகுல் காந்தி (தன் தந்தையைப் போன்றே வசீகரம்)
பிடிக்காதவர்: விஜய டி.ராஜேந்தர்

2. எழுத்தாளர்
பிடித்தவர்: சுஜாதா
பிடிக்காதவர்: நான் அதிகம் பேரை படித்ததில்லை என்பதால் அப்படி யாரும் இல்லீங்கோ.

3. கவிஞர்
பிடித்தவர்: வாலி
பிடிக்காதவர்: பேரரசு

4. இயக்குனர்
பிடித்தவர்: ஷங்கர்
பிடிக்காதவர்: (மீண்டும்) பேரரசு

5. நடிகர்
பிடித்தவர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பிடிக்காதவர்: சிபிராஜ்

6. நடிகை
பிடித்தவர்: அனுஷ்கா (அருந்ததி பார்த்ததிலிருந்து)
பிடிக்காதவர்: மகேஸ்வரி (யாருன்னு தெரியலையா? தப்பிச்சீங்க விடுங்க..)

7.இசையமைப்பாளர்
பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்: ஸ்ரீகாந்த் தேவா

8. தொழிலதிபர்
பிடித்தவர்: அம்பானி (சாமானியனிடமும் செல்போன் இருக்கக் காரணமானவர்)
பிடிக்காதவர்: விஜய் ஈஸ்வரன் (QuestNet மோசடி நிறுவனர்)

9. பதிவர்
பிடித்த பதிவர்: நர்சிம் (அவர் இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததால் மட்டுமல்ல)
பிடிக்காத பதிவர்: விரைவில்... (யாருமில்லன்றத எப்படி சொன்னேன் பார்த்தீங்களா)

10. விளையாட்டு
பிடித்தது: கிரிக்கெட்
பிடிக்காதது: Bullfighting (பாவம்.. அந்த மாட்ட உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசில கொன்னுருவானுங்க.. சிலநேரம் இவனுங்க உயிரும் போறதுண்டு..)

*******************************

தொடர அழைப்பது..

1. அவிய்ங்க ராசா
2. ஜாக்கி சேகர்

Friday, October 30, 2009

நீ முதல்ல தமிழ ஒழுங்கா பேசு!!!

இது கொஞ்ச நாளைக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம். நானும் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் செந்திலும் வெவ்வேறு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அன்று மாலை எங்கள் இருவருக்கும் தெரிந்த மற்றொரு நண்பரின் திருமண வரவேற்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து செல்வதாக திட்டம்.

மாலை நான் எனது அலுவலகத்திலிருந்து கிளம்பும் முன் அவனைத் தொடர்பு கொள்ள முயன்றேன். செல்பேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் அவனின் அலுவலக எண்ணுக்கு அழைத்தேன்.

எதிர்முனையில் ஒரு முரட்டுக்குரல் பேசியது.

"யார் வேணும்??"

"நான் செந்தில் கிட்ட பேசணும்..."

"நீ யார் சொல்லுங்க???" - வடமாநிலத்தை சேர்ந்தவர் போல.. தமிழ் தடுமாறியது அவரிடம்.

"நான் அவன் பிரெண்டு பேசறேங்க..."

"என்ன.. அவன் இவன்னு சொல்ற?"...

(இதுவேறயா என்று நினைத்துக் கொண்டு...) "சார்.. நான் அவன் என் பிரெண்டு... அப்படி தான் கூப்பிட்டுக் கொள்வோம்.. கொஞ்சம் செந்தில் கிட்ட போன் கொடுக்கறீங்களா...???"

"என்னம்மா நீ? நான் சொல்லிக்கிட்டே இருக்கு.. நீ செந்தில் கிட்ட போன் கொடு சொல்றீங்க?..."

இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று எண்ணியபடி...

"சார்.. கொஞ்சம் செந்தில் கிட்ட போன் கொடுக்கறீங்களா...???" என்றேன் மறுபடி...

"முதொல்ல நீங்க மரியாதையா பேசு..." என்றது அந்தக் குரல்...

வந்த கடுப்புக்கு... "நீ முதல்ல தமிழ ஒழுங்கா பேசு" என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

சிறிது நேரத்தில் செந்தில் என்னை அழைத்தான்.

"சொல்டா.. எங்க இருக்க??" இது நான்...

"அதைவிடுடா.. என் மேனேஜர் கிட்ட என்னடா சொன்ன?.. என்னை உள்ள கூப்பிட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு" என்றான் சோகமாக...

மச்சி சாரிடா... அவர் உன் மேனேஜரா???... கடுப்பேத்திட்டாருடா.. என்றபடி விஷயத்தை விளக்கினேன்...

நல்லா கடுப்பான போ.. அந்தாளு நார்த் இந்தியாடா... சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு... என்றான் சலிப்புடன்...

அதுக்கப்புறம் என்ன ஆனாலும் சரி.. அவன் அலுவலக எண்ணுக்கு மட்டும் நான் தொடர்பு கொள்வதேயில்லை..

Thursday, October 22, 2009

பிரபல பதிவர்கள் – எனது பார்வையில்

முன் குறிப்பு:
இது முழுக்க முழுக்க, நான் வாசித்த, வாசித்துக் கொண்டிருக்கிற பிரபல பதிவர்களுடைய பதிவுகளின் அடிப்படையிலேயும், அவைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலேயும் மட்டுமே எழுதப் பட்டது.. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

முக்கிய குறிப்பு (அ) மூக்குக் குறிப்பு:
இதில் சம்பந்தப் பட்டவர்களோ, உடன்பாடு இல்லாதவர்களோ, அல்லது அப்படின்னா நாங்க எல்லாம் பிரபல பதிவர்கள் இல்லையா என்பவர்களும் இங்கயே கருத்து தெரிவித்துவிடுங்கள்.. நேரில் தனியாகக் கூப்பிட்டு மூக்கில் குத்தவேண்டாம்!!! (மூக்கு முக்கியமில்லீங்களா!!! அதான்!)

**********************************************************

ஓ.கே... வாங்க! ஒவ்வொருத்தரா பார்ப்போம்!!!

அனுஜன்யா:
ஆரம்பத்திலேயே குழப்பறேனா??? அவரோட கவிதைகள் படியுங்கள்.. அப்போது தான் புரியும், நானும் மற்ற சிலரும் கவிதை என்ற பெயரில் எழுதி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை.. இவரின் பல கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சங்ககாலப் புலவர்களின் அருகாமை இருந்தால் மட்டுமே சாத்தியம். விளக்கத்தை வார்த்தைகளுக்குள் ரகசியமாய் ஒளித்து வைக்கும் சூட்சுமம் அறிந்தவர். இலக்கியம் விரும்புவோரின் ஒரே சாய்ஸ்.

நர்சிம்:
வலைப்பக்கம் மூலம் மற்றவை மட்டுமல்ல மனிதம் வளர்க்கவும் முடியும் என்று அடிக்கடி நிரூபிக்கும் நபர். "கார்பொரேட் கம்பர்" என்று அழைக்கப் படுகிறவர். சங்கத் தமிழின் பல பாடல்களை தக்க விளக்கத்துடன் தருபவர். மலரும் நினைவுகளாய் இவர் எழுதும் பல பதிவுகள் நம் நினைவில் மலர்களாய் இருக்கும் எப்போதும். "ஏதாவது செய்யணும் பாஸ்" என்ற நல்ல என்'ணங்கள் கொண்டவர். ஒரே வருத்தம். பிரச்சனைகளின் போது இவர் எப்போதும் தனி ஆளாய் குரல் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கிறார். "நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்....."

பரிசல்காரன்:
"ரசிப்போர் விழி தேடி" என்று ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து ரசிக்கும் குணம் கொண்ட அனைவரும் இவரின் வழி தேடி வர வேண்டும். ஆழ்ந்த எழுத்துக்கள். எவர் மனமும் புண்படும்படி இவர் எழுதி நான் படித்ததில்லை. மென்மையாய் மட்டுமே இவர் எழுதினாலும் பல கருத்துக்கள் வன்மையாய் நம் மனதில் பதியும். அட்டகாசமான அவியல், அவ்வபோது கவிதைகள், கதைகள், நகைச்சுவை என்று தென்றலாய் வீசுபவர். ஒரே குறை: வேலைப்பளு காரணமாய் தென்றல் விட்டு விட்டு வீசும்.

கார்க்கி:
சரவெடி. விடாமல் எழுதிக் கொண்டே இருப்பார். எதைப் பற்றியாவது.. வாசகர் வட்டம் எவ்வளவு பெரியது என்பது இவரின் பல பதிவுகளின் மூலம் புலப்படும். பதிவுலகம் அடுத்தகட்டத்தை எட்ட விழைபவர்களில் இவரும் ஒருவர். ஏழு, காக்டெயில் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். தேவதை, புஜ்ஜி என்று புல்லரிக்க வைப்பார். திடீரென விஜய் பற்றிய விவாதங்களும், ஆங்காங்கே சில படு மொக்கைகளுமாய் நம்மை கிறுகிறுக்கவும் வைப்பார். மொத்தத்தில் கமர்ஷியல் கலவை.

கேபிள் சங்கர்:
வாசககர்களால் கேபிளார் என்றும், சக பதிவர்களால் "யூத்" என்றும் செல்லமாக அறியப்படுபவர். இப்போதெல்லாம் இவரின் விமர்சனம் படித்துவிட்டு தான், புதிதாய் வெளியாகும் படங்களுக்குப் போவதைப் பற்றி யோசிக்கிறேன். கொத்துபரோட்டா பரிமாறி வருவோரை பசியாற வைப்பவர். குறும்படங்கள், நிதர்சனக் கதைகள் என்று ஒவ்வொன்றும் நின்று விளையாடும் இவர் பதிவில். இவரின் ஹாட்-ஸ்பாட் பற்றியும் ஏ-ஜோக்ஸ் பற்றியும் சொல்லவில்லை என்றால் எனக்கு ரசனை கம்மி என்று அர்த்தம்.

ஜாக்கி சேகர்:
அட்டகாசமான சினிமா விமர்சகர். உலகப் படங்களைப் பார்த்து அதில் தான் ரசித்தவற்றை மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். முரட்டுத் தனமான எழுத்து நடை. ஆனால், வெகு சாதாரணத் தமிழிலேயே கருத்துக்கள் எளிதாக மக்களை சென்றடையும்படி பதிவிடுபவர். இவர் தன் மனைவியின்பால் கொண்ட அன்பு அடிக்கடி இவர் எழுத்துக்களில் பளிச்சிடும். இவர் ஒரு திங்க் குளோபல், ஆக்ட் லோக்கல் ஆசாமி. இவரும், கேபிள் சாரும் வெகு விரைவில் கோடம்பாக்கத்தைக் கலக்கப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

தாமிரா (அ) ஆதிமூலகிருஷ்ணன்:
எனக்குத் தெரிந்து இவர் பதிவுகளைத் தான் ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தேன் என்று நினைவு. அப்போது இவர் எடுத்த போட்டோக்களை எல்லாம் பதிவிடுவார். (கரெக்ட்டா சார்??).. அமர்க்களமாய் எழுதுவார். வெறும் எழுத்துக்களில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார். தங்கமணிகள் பற்றிய இவரின் ஒவ்வொரு பதிவும் கலக்கலாய் இருக்கும். அவ்வபோது சிக்ஸ் சிக்மா, போக்க யோகே(அப்படின்னாவா? என்னைக் கேட்டா???) என்றெல்லாம் எழுதி என் போன்ற மரமண்டைகளுக்கு பீதியைக் கிளப்புவார்.

அவிய்ங்க ராசா:
மதுரை பாணியில் (மதுரை சம்பவம் இல்லீங்க...) பதிவுகள் படிக்க வேண்டுமா?? யோசிக்காமல் இவர் பதிவை படிக்கலாம். பொதுவாக இவர் பதிவினை படிக்க ஆரம்பிக்கையில் ஆர்வத்தில் கண்கள் விரியும். முடியும்போது கண்கள் குளமாவது உறுதி. ஒன்று சென்டிமென்ட்டாக இருக்கும்.. அல்லது நகைச்சுவையாக இருக்கும். புனைவோ, சொந்த அனுபவங்களோ அவருக்கு ஏற்பட்ட அதே உணர்ச்சியை படிப்பவருக்கும் பரப்பி விடுவதில் கில்லாடி. முக்கியமாய் பதிவுலகைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர். அது அவரின் பல பதிவுகளில் புலப்படும்.


*************************

அவ்வளோ தாங்க... இவங்கள எல்லாம் கூர்ந்து கவனித்து தாங்க நானும் எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை... ஆனாலும் நீங்க இன்னொரு முறை முன்குறிப்பையும், மூக்குக் குறிப்பையும் படிப்பது எனக்கு நல்லது...!!!

Sunday, October 18, 2009

தீபாவளி – சிறுகதை

அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
இது என் முதல் முயற்சி.. முன்பே யோசித்து வைத்திருந்ததை தீபாவளிக்காக சற்று மாற்றியமைத்து இருக்கிறேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்.. நன்றி!!!

*********************
diwali
விடிந்தால் தீபாவளி...

"எனக்கு சுறுசுறு மத்தாப்பு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........." மூன்று வயது சௌம்யாவின் குரல் அந்த பிளாட்டின் இரண்டாவது மாடி முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது...

வேணாம்டா செல்லம்... அப்புறம் உன் கையில "ஊஊஊ" பட்டுடும்.. என்று சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார் அவளின் அப்பா..

சத்தம் பொறுக்காமல் கதவை மூடிவிட்டு வந்தார் சீனிவாசன்.

"அப்பப்பா... குழந்தையா அது?? என்ன கத்து கத்துது??? ரெண்டு நிமிஷம் டிவியில் நியூஸ் பார்க்க முடியுதா...? அடுத்த அசோசியேஷன் மீட்டிங்கில் கம்ப்ளைண்ட் பண்ணனும்" என்றவாறே இருக்கையில் அமர்ந்தார்..

"நான் கூட உங்ககிட்ட சொல்லனும்னு நெனைச்சேங்க... சில சமயம் அந்த குழந்தை போடற சத்தத்துல மதியத்துல தூங்கவே முடியறதில்ல..." - இது சீனிவாசனின் மனைவி கமலம்மாள்...

சீனிவாசன். தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் அடையாளமாக கை, கால், முகம் என அங்கங்கு சிறுசிறு தீக்காயங்களின் வடுக்கள் உண்டு அவருக்கு. கமலம்மாள் கணவன் குணமறிந்து நடக்கும் இல்லாள். இவர்களின் ஒரே மகன் ஸ்ரீதர். கல்யாணமான கொஞ்ச நாளிலேயே மனைவியுடன் தனிக்குடித்தனம் போய்விட்டான். தன் மனைவி மற்றும் குழந்தையுடன் மாதம் ஒருமுறையோ இருமுறையோ வந்து இவர்களைப் பார்த்துவிட்டுச் செல்லுவான். சீனிவாசனுக்கும் கமலம்மாளுக்கும் பேரன் ஹரி தான் உலகம். அவனுக்கோ இவர்களிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. தன் அம்மாவைப் போலவே..

நாளை தீபாவளிக்கு வரப்போகும் மகன், மருமகள் மற்றும் பேரனுக்கான புத்தாடைகளை எடுத்து பூஜை அறையில் தயாராய் வைத்துவிட்டு வந்த கமலம்மாள், "என்னங்க... ஸ்ரீதர் காலைல எத்தனை மணிக்கு பேரனை அழைச்சிக்கிட்டு வருவான்னு ஒரு போன் போட்டுக் கேளுங்களேன்..." என்றார்.

சரி என்றவர், தொலைபேசியை கையிலெடுத்தார்.

"ஹலோ... ஸ்ரீதர்.. அப்பா பேசறேன்டா..."

"சொல்லுங்கப்பா.."

"நாளைக்கு தீபாவளி.. நீங்க எல்லாம் எத்தனை மணிக்கு வருவீங்கன்னு..."

சொல்லி முடிப்பதற்குள் முந்திக்கொண்டான் ஸ்ரீதர்...

"இல்லப்பா... நாளைக்கு நாங்க வரல..."

"ஏன்டா. என்னாச்சு...??"

"பின்னே என்னப்பா.. போன தடவை வந்தபோது நீங்க ஹரிய தூக்கி கொஞ்சியிருக்கீங்க.. உங்க தீக்காயத்தைப் பார்த்து பயந்து அவனுக்கு ரெண்டு நாள் ஜுரமே வந்துடுச்சு.. அதனால... நல்ல நாளும் அதுவுமா எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கணும்னு உங்க மருமக சொல்றாப்பா... புரிஞ்சுக்குங்க.. நான் காலையில் பேசறேன்.. வைக்கிறேன்..."

பதிலுக்குக் காத்திராமல் மறுமுனை துண்டிக்கப் பட்டது.

"என்னங்க சொன்னான்...??" ஆவலுடன் கேட்டார் கமலம்மாள்...

விஷயத்தை சொல்லி முடிப்பதற்குள் கமலம்மாளின் கண்களை கண்ணீர் தழுவியிருந்தது.

"எனக்கு மனசே சரியில்ல.. அந்த சட்டைய எடு.. நான் கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.." என்றபடி கிளம்பினார்.

கனத்த இதயத்துடன் இவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவும், குழந்தை சௌம்யா வேகமாக ஓடிவந்து இவரின் மேல் மோதிக் கொள்ளவும் சரியாக இருந்தது. அவள் கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டார்.

சட்டென இவர் கைகளைப் பார்த்தவள்... "அச்சச்சோ... தாத்தா கையில ஊஊஊ பட்டிருக்கே... வலிக்குதா தாத்தா??.." தன் பிஞ்சுக் கைகளால் அவர் வடுக்களை தடவியபடி கேட்டாள்...

பட்டென வாரி அணைத்துக் கொண்டவர்.. "இல்லடா கண்ணா... வா.. தாத்தா உனக்கு சுறுசுறு மத்தாப்பு வாங்கித் தரேன்..." என்று கண்ணீருடன் முத்தமிட்டார்.

மகிழ்ச்சியுடன் நடக்கத் துவங்கினார்கள் இருவரும்... பட்டாசுக் கடை நோக்கி...

Friday, October 9, 2009

மம்மிய ஷுட் பண்ணிடலாம்...

ரயில் பயணம் என்பது சுகமான ஒரு விஷயம். ஒவ்வொரு முறையும் பலதரப்பட்ட மக்களையும் ஒருசேர சந்திக்கும் வாய்ப்புண்டு. அதிலும் நாம் நண்பர்களுடன் குழுவாகப் போனால் கொண்டாட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இம்முறை நான் சொந்த அலுவல் காரணமாக தனியே பயணிக்கிறேன். இரு தினங்களுக்கு முன் நான் மேற்கொண்ட ஹைதராபாத் பயண அனுபவம் இதோ உங்கள் பார்வைக்கு...

********************

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....." என்று ஆரம்பித்து மூன்று மொழிகளில் ஏதோ ஒரு ரயில் கிளம்பவிருப்பதை அறிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்ணின் குரல்...
சென்ட்ரல் ஸ்டேஷனின் எட்டாவது பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த சென்னை-ஹைதராபாத் விரைவு ரயிலின் எனக்கான கம்பார்ட்மெண்டைத் தேடியபடி நடந்து கொண்டிருந்தேன்...

என் நேரம்... நீநீநீநீநீ....ளமான அந்த ரயிலின் கடைசியில் இருந்தது எனக்கான கோச்.. கொஞ்சம் விட்டால் என்ஜின் டிரைவர் பக்கத்துலயே சீட் கொடுத்திருப்பானுங்க போல.. அவ்வளவு தூரம்... அருகிருந்த கடையில் சில்லென்று ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு என் கோச்சை அடைந்தேன்..

முன்பதிவு செய்தபோதே தொல்லையில்லாமல் தூங்குவதற்கு வசதியாய் அப்பர் பெர்த் செய்திருந்தேன்.. அதனால் ஜன்னலோர சீட் கிடைக்க வில்லை.. அடடா.. தூங்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்திருக்கலாமே.. வடை போச்சே.. என்று நொந்து கொண்டே நான் கொண்டு சென்ற எனது பேக்-ஐ மேலே வைத்துவிட்டு எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்... ரயில் கிளம்ப இன்னும் சிறிது நேரம் மட்டும் இருப்பதை கடிகாரம் சொல்லியது...

சற்று நேரத்தில் இருக்கைகள் நிரம்பி என்னைச் சுற்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் ரீங்காரமிடத் துவங்கின... ரயிலும் மெதுவாய் நகரத் துவங்கியது.. என் டிக்கெட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த டிடிஆரிடம் ரயில் எத்தனை மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். சைடு-அப்பர் புண்ணியவான் ஒருத்தர் ரயில் வேகமெடுக்கத் துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் தெலுகு செய்தித்தாள் ஒன்றுடன் மேலேறிப் படுத்து விட நான் சென்று ஜன்னலோரம் அமர்ந்தேன்... பின்னோக்கியபடி நடக்கும் மரங்களும் மற்றவைகளும் காலமும் சற்று பின்னால் சென்று நாம் மகிழ்வாய் இருந்த கணங்களுக்குள் நம்மைத் தள்ளிவிடாதா என்று ஏங்க வைத்தன...

பெருமூச்சுடன் எதிரில் கவனித்தேன்.. தன் தாயின் மடியில் அமர்ந்து ஜன்னல் வழி வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் அந்த குட்டிப் பையன்.. மூன்று அல்லது மூன்றரை வயதிருக்கலாம் அவனுக்கு... என்னைப் பார்த்தும் சிரித்தான்.. என்னிடம் அழைத்தேன்.. உடனே ஒட்டிக் கொண்டு விட்டான்... கவின்.. அது தான் அவன் பெயராம்.. உன் பெயரில் பால் எல்லாம் இருக்குடா என்றேன்.. "..தெரியுமே.. அத குடிச்சா வேகமா வளருவாங்களே.." என்றான்... விளம்பரங்கள் குழந்தைகளை மிகவிரைவாய் சென்றடைகின்றது என்பது எனக்கு விளங்கியது...

ஒரு இடத்தில நிற்காமல் கம்பார்ட்மெண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்... ரயிலுக்குள் விற்கும் ஒவ்வொரு பொருளையும் வாங்கித் தரும்படி தன் அம்மாவிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.. அவன் அம்மாவோ நீ அடம் பிடித்தால் அந்த அங்கிள் உன்னை தூக்கிட்டு போயிடுவார் என்று என்னைக் காட்டி சொன்னார்.. உடனே நானும் "சந்தோஷமாக" என்று சொல்லி சிரித்தேன்...

இவனை திசை திருப்புவதற்காக கையோடு கொண்டுவந்திருந்த "பிக்சர்ஸ் புக்"-ஐ கொடுத்தார்... அதிலிருப்பவைகளின் பெயரை எல்லாம் என்னிடம் தவறாகச் சொல்லிக் காட்டி சிரித்தான்.. பெயர் தெரியாத படங்களை "குவா-குவா-ஷாஷா" என்று சொல்லி சிரித்தான்.. அதன் அர்த்தம் புரியவில்லை.. ஆனால் அவன் சொன்ன விதம் பிடித்திருந்தது.. "குவா-குவா-ஷாஷா"... இந்த வார்த்தையை அவன் பலமுறை பயன்படுத்தினான்... மிகவும் அழகாக....

சிறிது நேரத்தில் எங்கள் அருகே பிளாஸ்டிக் பொம்மைகளை விற்றுக் கொண்டு வந்தார் ஒருவர்.. பத்து சீட் தள்ளியிருந்த ஒரு பெண்மணி எழுந்து வந்து இவன் எதிரில் தன் பிள்ளைக்கு ஒரு பிளாஸ்டிக் துப்பாக்கி பொம்மை வாங்கிக் கொடுத்தார்... அவ்வளவு தான்... தனக்கும் ஒரு துப்பாக்கி வேண்டுமென்று இவன் தனது அம்மாவிடம் மீண்டும் அடம் பிடிக்க ஆரம்பித்தான்.. எவ்வளவு கொஞ்சியும் கெஞ்சியும் அவன் அம்மா மசியவில்லை... சற்று நேரம் பொறுத்துப் பார்த்த பொம்மை வியாபாரியும் அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று விட்டார்... துப்பாக்கி பொம்மை வாங்கிய அந்த குழந்தைக்கும் இவன் வயது தான் இருக்கும்.. அது வேண்டுமென்றே நிமிடத்திற்கொருமுறை இவனிடம் ஓடிவந்து சுடுவது போல் காட்டி விட்டு போய்க்கொண்டிருந்தது... இவன் கிட்டத்தட்ட அழுதே விட்டான்... மீண்டும் அந்த பொம்மைக்காரர் வந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லி நான் சமாதானப் படுத்தியபின் தான் அமைதியானான்... ஆனால் ஐந்து நிமிடத்திற்கொருமுறை என் இன்னும் அந்த பொம்மைக்காரர் வரவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தான்..

அப்படி இப்படியென்று ரயில் நெல்லூரை நெருங்கியிருந்தது. ஒரு காபி வாங்கிக் குடித்துவிட்டு டின்னர் என்ன வேண்டும் என்று கேட்ட IRCTC நபரிடம் வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தேன். எட்டு மணிவாக்கில் வெஜிடபிள் பிரியாணியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் நாற்பது ரூபாயை வாங்கிக் கொண்டு போனார் அந்த நபர்.

கவினுக்குப் பசி எடுத்திருக்கும் போல.. அவன் அம்மா கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு இட்லியும் சட்னியும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். அப்போதும் அவன் எனக்கு துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தான். நான் அவனிடம், "நீ ஒழுங்காக சாப்பிட்டால் அங்கிள் உனக்கு வாங்கித் தருவேன்" என்று சொல்லி சாப்பிட வைத்தேன். ஒருவழியாக இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டான். நானும் எனது வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட்டு முடித்தேன்.

சிறிது நேரம் கழித்து கவினுக்கு குட்நைட் சொல்லிவிட்டு என் பெர்த்தின் மேலேறிப் படுத்தேன். அப்போதும் கவின் அந்த துப்பாக்கி வைத்திருக்கும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கிப் போய்விட்டேன். சரியாகக் காலையில் ஐந்து மணிக்கு விழிப்பு வந்தபோது ரயில் செகந்திராபாத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கவின் தூங்கிக் கொண்டிருந்தான். கவினின் அம்மா அவன் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். நான் இறங்கிச் சென்று முகம் கழுவி விட்டுவந்தேன். ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. கவினை அவன் அம்மா எழுப்பினார். எழுந்ததும் என்னைப் பார்த்து சிரித்தவன், துப்பாக்கி பொம்மை வாங்கிட்டீங்களா?? என்று கேட்டான். நானும் ரயிலில் இருந்து இறங்கியதும் வாங்கித்தருகிறேன் என்று சொன்னேன். அப்போதும் கவினின் அம்மா அவனை அதையெல்லாம் வாங்கக் கூடாது என்று அதட்டினார். உடனே என் காதருகில் வந்தவன், "நீங்க வாங்கித் தாங்க அங்கிள்... இந்த மம்மிய ஷுட் பண்ணிடலாம்.." என்று கூறி சிரித்தான்.

ரயில் நின்றது. கவினின் அப்பா அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவரைப் பார்த்தும் தாவிச் சென்றவன், "அங்கிள்.. மறக்காம எனக்கு துப்பாக்கி பொம்மை வாங்கிட்டு வாங்க" என்று சொல்லி கையசைத்து விடை பெற்றான். நானும் "கண்டிப்பாக வாங்கித் தருகிறேன்" என்று புன்னகையுடன் விடைபெற்றேன்..

அடுத்தமுறை கவினைப் பார்க்கும் போது அவனுக்குக் கண்டிப்பாக ஒரு துப்பாக்கி பொம்மை வாங்கித் தர வேண்டும்!!!

Saturday, August 1, 2009

எங்கே என் தேவதை???

தேவதைகளெல்லாம்
ஒன்று கூடி
என்னை சந்தித்தன
ஒரு நாள்...

என்னவென்று விசாரித்தேன்...

தேவதைகளின் உலகத்தில்
திருவிழாவாம்...
அதற்கு
தேவதைகளின் தலைவியான
நீ தலைமையேற்க வேண்டுமாம்...
என் அனுமதி தேவைப்படுகிறதாம்
உன்னை அழைத்துச் செல்ல...

எப்படி முடியும் என்னால்
உன்னைப் பிரிந்திருக்க???
அதனால்
முடியாதென்று சொல்லிவிட்டேன்
ஒருகணமும் யோசிக்காமல்...

கொஞ்சம் ஆடித்தான்
போய்விட்டன
அத்தனை தேவதைகளும்..

ஒரு சில கெஞ்சின..
ஒரு சில கொஞ்சின...
ஒரு சில அதட்டின..
ஒரு சில அழுதன...

தேவதைகள் அழுவதில்லை
என்ற கூற்றைப்
பொய்யாக்கிய சந்தோஷத்தில்
அவைகளிடம் நான் சொன்னேன்..

"உங்கள் உலகத்துக்கு
வேண்டுமானால் அவள்
தலைவியாய் இருக்கலாம்..
ஆனால்
என் உலகமே அவள் தான் என்று..."


நெகிழ்ந்து விட்ட
எல்லா தேவதைகளும்
மகிழ்வுடன் ஆசிர்வதித்தன..
நீ என் தேவதையாய்
எப்போதும் என்னுடன் இருக்க!!!

*******************************

Sunday, July 26, 2009

சுனாமி - டிசம்பர் 26, 2004

நேற்று முன்தினம் மும்பையை சுனாமிப்(?) பேரலைகள் தாக்கியதை செய்தியில் கண்டேன்...
டிசம்பர் 26, 2004 அன்று காலை, சுனாமி சென்னையைத் தாக்கிய நேரத்தில் மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன்... எப்படியோ ஓடிப் பிழைத்தேன் அன்று என் நண்பர்களுடன்... அதன் கோரத்தை என்னால் முடிந்த அளவுக்கு விவரிக்க முயன்றிருக்கிறேன்....

(குறிப்பு:)கொஞ்சம் பெரிதாகத் தான் இருக்கும்... பொறுத்துக் கொள்ளவும்..

====================================

டற்கரையில் இனிமையாய் கால் பதித்த நேரங்கள் முடிந்து
கண்ணீர் மை தொட்டு கவிதை எழுதும் நேரமிது...

அந்த விடிகாலை வேளையில் சுமத்ரா கொண்ட சிறு நடுக்கம்
எத்தனையோ பேருக்கு விடியாமலேயே போய்விட்டது...

நீ எம்பிக்குதித்த சொற்ப நிமிடங்களில் எழில் கொஞ்சிய இடமெல்லாம்
எமன் வந்து போன இடமாய் உருமாறிக் கிடக்கிறது...

இனி உன் கரைதேடி ஓய்வெடுக்க வருவோரெல்லாம்
உயிரைக் கையில் பிடித்து ஓடவும் தயாராய்த் தான் வர வேண்டும்...

நீ குதறிவிட்டுப் போனதில் அழகிய பிஞ்சுகள் எல்லாம்
அழுகிய பிரேதங்களாய்... எழுதும் போதே இப்படி வலிக்கிறதே..
நீ ஏறி மிதித்தபோது எப்படி வலித்திருக்கும்??

இவை மட்டுமா???

உன்னைக் கவிதையாய் வர்ணித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறாய்...

கடவுளாய் வணங்கியவர்கள் வயிற்றில் கலவரத்தைக் கரைத்திருக்கிறாய்...

பெற்றவர்கள் கண்முன்னே பிள்ளைகளைத் தின்றிருக்கிறாய்...

உற்றவர்களையும் உடமைகளையும் அடாவடியாய் அடித்துச் சென்றிருக்கிறாய்...

உன் அலையோசையால் பலரின் உயிரோசை அடக்கி இருக்கிறாய்...

இதுவரை பொழுதுபோக்கு அம்சமாய் இருந்த நீ
இன்று பலரது உயிர்போக்கும் அபாயமாய் உருவெடுத்திருக்கிறாய்...

உன் அலைகரம் நீட்டி உலக வரைபடத்தில்
ஒருசில கிராமங்களை கிழித்துப் போட்டிருக்கிறாய்...

ஏட்டில் மட்டுமே படித்து வந்த அனுபவங்களை
எதிரில் வந்து நிகழ்த்திக் காட்டியிருக்கிறாய்...

அலையோரமாய் தங்கள் பெயர் எழுதி விளையாடியவர்களை எல்லாம்
இறந்தவர் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறாய்...

ஏனிந்த வெறியாட்டம்???

நீதான் நீளத்திலும் ஆழத்திலும் பெரியவள் என்பதை ஒப்புக்கொண்டு விட்டோமே?
பின் ஏன் உயரத்திலும் உன்னைப் பெரியவளாய்க் காட்ட எங்கள் உயிரோடு விளையாடுகிறாய்???

என்றாவது ஒருநாள் அஸ்தியாய் வந்து உன்னுள் தானே கரையப் போகிறோம்?
அதற்குள் நீயே அவசரப்பட்டு எங்கள் உயிர் பறித்ததின் அவசியம் என்ன???

எங்கள் உயிர்களை ஓடிப்பிடித்து விளையாடியதற்கும்,
இப்போது உடல்களை ஒளித்து வைத்து விளையாடுவதற்கும் காரணம் என்ன???

எங்களை மரண ஓலை வாசிக்க வைத்துவிட்டு
நீ மட்டும் மௌனம் பேசுவதின் மர்மம் என்ன???

உன் சுழல்நாக்கு வளைத்து விழுங்கியதில்
அனைத்தையும் பறிகொடுத்தவர்களுக்கு உன் பதில் என்ன?

இத்தனை கேள்விகளுக்கும் விடைகொடுக்க முடியுமா உன்னால்???

புலி பதுங்குவது பாய்வதற்குத் தான்..
அலை பதுங்குவது பல உயிர்களை மாய்ப்பதற்குத் தான்
என்பதை சொல்லாமல் சொல்கிறாயா???

எதுவாக இருந்தாலும் இப்போதே சொல்லிவிடு!
ஏனெனில்,
உன்னைக் கேள்வி கேட்க அடுத்தமுறை நான் இருப்பேனா? இல்லை
என் பிணத்தையே தேடிக் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை...

Saturday, July 25, 2009

நீ... நான்... மற்றும் மழை!

யார் சொல்லியும்Love & Rain
கேட்காமல் நனையத்துடிக்கும்
உன் செல்ல திமிரை
நினைவூட்டியது..
நேற்று பெய்த மழை...

********************************************

நனைந்து விட்ட
என் தலைமுடி துவட்டுகிறாய்...
உன் துப்பட்டாவின் தயவால்
மீண்டும் மேகம் சேர்கின்றன
மழைத் துளிகள்...

********************************************
புயலாய் என்னை மையம் கொண்டு
மழையாய் நனைக்கின்றன
உன் நினைவுகள்...
கரையேற விரும்பாத கட்டுமரமாய்
தத்தளிக்கிறேன் நான்...

Thursday, July 16, 2009

அறிமுகம்

இன்று முதல் என் எண்ணங்களை உங்கள் பார்வைக்கு கடை விரிக்கிறேன்... என்னை வலைப்பக்கத்துக்கு அறிமுகப்படுத்தி ஊக்கமூட்டிய நண்பர்களுக்கும், இனிமேல் அறிமுகமாகி ஊக்கப்படுத்தப் போகிற நண்பர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்...